#007. ததி உறு மத்து

7. ஆவியின் அடைக்கலம் நீ.

ததி உறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதி உறு வண்ணம் கருத்து கண்டாய் கமலாலயனும்
மதி உறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
துதி உறு சேவடியாய்! சிந்துரானான சுந்தரியே.

தாமரையில் உறையும் பிரமனும், இளம் பிறை அணிந்த சிவனும், திருமாலும் பணியும் சிவந்த திருவடிகளை உடைய தேவியே! சிந்தூரம் விளங்கும் அழகியே! தயிர் கடையும் மத்தைப் போல என் உயிர் பிறப்பு, இறப்பு என்னும் சுழல்களில் சிக்காமல் இருக்க அருள் புரிவாய்.