#046. வெறுக்கும் தகைமைகள்

# 46. உன்னை வாழ்த்துவனே!

வெறுக்கும் தகைமைகள் செய்யினும் , தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியது அன்றே; புது நஞ்சை உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப் பாகம் கலந்த பொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவனே.

பெரியவர்கள் தம் அடியாரின் தீச் செயல்களை பொறுத்துக் கொள்வது புதியது அல்லவே! நீ வெறுக்கும் செயல்களை நான் செய்தாலும், நீ பொறுத்தருள வேண்டும். புது நஞ்சை உண்டு, கறுத்து, நீலகண்டனான இறைவனின் இடப்பாகத்தில் கலந்த பொன்னே! எனக்கு எதிரான செயல்களையே நீ செய்தாலும்,  நான் உன்னை வாழ்த்திக் கொண்டே இருப்பேன்!