#024. மணியே மணியின் ஒளியே

# 24. நீயே என் தெய்வம்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே!
பண்யேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

மாணிக்கமே! மாணிக்கத்தின் ஒளியே! ஒளி வீசும் மணி பதித்த அணியே! அணிகளுக்கெல்லாம் அழகே! உன்னிடம் தஞ்சம் அடையாதவர்களுக்குப் பிணியே! அன்பர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தே! விண்ணவர்களுக்கு விருந்தே! உன் திருவடித் தாமரைகளைத் தொழுத பின்னர் நான் வேறு எவரையும் தொழேன்!