#082. அளியார் கமலத்தில்

# 82 . ஆனந்தத்தில் அமிழ்ந்தேன்.

அளியார் கமலத்தில் ஆரணங்கே, அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர் திருமேனியை உள்ளுதொறும்
களி ஆகி, அந்தக்கரணங்கள் விம்மி, கரை புரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே?

வண்டுகள் வட்டம் இடும் தாமரை மலரில் உள்ள தாயே! அனைத்து உலகங்களும் உன் ஒளியாக விளங்குகின்றன. அத்தனை ஒளி படைத்த உன் வடிவழகை எண்ணும் போதெல்லாம் களிப்பு மிகுந்து, என்னுடைய அந்தக்கரணங்கள் விம்மி, ஆனந்தக் கடலில் திளைக்கும் போது, உன்னுடைய திறமையை என்னால் எப்படி மறந்து விட முடியும்?