#050. நாயகி, நான்முகி

# 50. சரணங்களே அரண்!

நாயகி, நான்முகி, நாராயணி, கை நளின பஞ்ச
சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதி நச்சு
வாய் அகி மாலினி, வாராகி, சூலினி, மாதங்கி என்று
ஆய கியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

உலக நாயகி; நான்முகனின் சக்தியாகிய பிராமி; நாராயணி என்னும் நாராயணனின் சக்தி; ஐந்து மலர்க்கணைகளை உடையவள்; சாம்பவி என்னும் சங்கரனின் சக்தி; சங்கரி; நீலி எனப்படும் சியாமளாதேவி; பாம்பு மாலை அணிந்தவள்; பூமித்தாய்; சூலம் ஏந்தியவள்; மதங்க முனிவரின் புதல்வியாகிய மாதங்கி; என்று பல பெயர்கள் பெற்ற கீர்த்தி மிக்க தேவியின் திருவடிகளே நமக்கு மிகச் சிறந்த பாதுகாப்பு அரண்.