#045. தொண்டு செய்யாது

# 45. பொறுத்தருள வேண்டும்.

தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சை
பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின் வெறுக்கை அன்றே.

தேவியே! உனக்குத் தொண்டு செய்யாமலும், உன் திருவடிகளைத் தொழாமலும், துணிந்து தன் மனம் போன போக்கில் தான் விரும்பிய தொழில்களைச் செய்தவர்கள் சிலர் உண்டோ? அன்றி இல்லையோ? நானும் அது போன்றே செய்தால் அது உன்னால் வெறுக்கப்படும் தவமோ? மாறான செயல்களை நான் செய்தாலுமே அவற்றை நீ பொறுத்துக் கொள்ள வேண்டும் அம்மா!