#094. விரும்பித் தொழும்

# 94. பித்தர் ஆகும் பக்தர்.

விரும்பித் தொழும் அடியார் விழிநீர் மல்கி, மெய் புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்தம் ஆகி, அறிவு இழந்து
கரும்பிற் களித்து, மொழி தடுமாறி, முன் சொன்ன எல்லாம்
தரும் பித்தர் ஆவார் என்றால் அபிராமி சமயம் நன்றே.

விரும்பி வழிபடும் அடியவர்களின் விழிகளில் பக்திப் பரவசத்தால் கண்ணீர் பெருகும்; மெய்ப் புளகம் அடையும் ; ஆனந்த வெள்ளம் பொங்கித் ததும்பும் ; இனிமை உணர்வில் களித்துச் சொற்கள் தடுமாறிப் பித்தரைப்போல அனுபவம் அடைவார்கள். இத்தகைய அனுபவங்களைத் தரும் அபிராமியின் சமயம் மிகவும் நன்று.