#086. மால் அயன் தேட

# 86 . காட்சி தருவாய்!

மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போன்ற பனி மொழியே.

பாலையும், தேனையும், பாகையும் போன்று இனிக்கும் மொழி படைத்த தேவியே! கொடிய யமன் தன் சூலாயுதத்தை  என் மேல் செலுத்தும் போது, திருமாலும், பிரமனும், வானவர்களும் தேடித் திரியும் உன் அழகிய திருவடிகளையும், வளைக்கரங்களையும் கொண்டு என் முன் காட்சி தந்தருள்வாய்!