#095. நன்றே வருகினும்

# 95. எனது எல்லாம் உனதே!

நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது
ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்; எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனது என்று அளித்து விட்டேன் ;அழியாத குணக்
குன்றே, அருட்கடலே, இமவான் பெற்ற கோமளமே!

இமயமலை அரசனின் திருமகளான கோமளவல்லித் தாயே! என்றும் அழியாத குணக் குன்றே! அருட்கடலே! நன்மை வந்த போதிலும், தீமை வந்த போதிலும் அவற்றைப் பற்றி நான் வருந்துவது இல்லை. அவை எல்லாம் உன்னையே சாரும். என்னுடைய எல்லாவற்றையும் உன்னுடையது என்று என்றோ நான் உனக்குக் காணிக்கை ஆக்கிவிட்டேனே !