#098. தைவந்து நின்அடி

# 98. பொய்யர் நெஞ்சில் பொருந்தாள்!

தைவந்து நின்அடித் தாமரை சூடிய சங்கரர்க்கு,
கை வந்த தீயும், தலை வந்த ஆறும் கரந்தது எங்கே?
மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒருகாலும் விரகர் தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியாமடப் பூங்குயிலே!

உண்மையான அன்பு கொண்ட உள்ளங்களில் அல்லாமல், வஞ்சகம் நிறைந்த உள்ளங்களில் ஒரு நாளும் புகுவதை அறியாத இளம் பூங்குயிலை ஒத்த தேவியே! சிவபிரான் உன் திருவடித் தாமரையை வருடிப் பின்னர் தம் தலை மீதும் சூட்டிக்கொண்டபோது, அவர் கையில் உள்ள மழுவும், தலைமேல் உள்ள கங்கையும் எங்கே சென்று ஒளிந்து கொண்டன?