#023. கொள்ளேன் மனத்தில்

# 23. என் குறிக்கோள்.

கொள்ளேன் , மனத்தில் நின்கோலம் அல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தில் விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியே என் கண்மணியே.

பரந்து விரிந்த மூன்று உலகங்களுக்கு உள்ளும் வெளியும் நிறைந்தவளே; என் உள்ளக் கமலத்தில் விளைந்த தேனே! அன்பர்கள் களிக்கும் களிப்பே! எளியேன் என்னுடைய கண்மணியே! என் மனத்தில் உன் வடிவம் அன்றி வேறு எதனையும் நான் ஏற்க மாட்டேன். உன் அன்பர் கூட்டத்தை விட்டுப் பிரிய மாட்டேன். வேறு சமயங்களையும் விரும்ப மாட்டேன்!